Home குறிப்பிடத்தக்கதுஅருங்காட்சியகம் பெர்லிஸுக்குப் பயணம்-13 (ஆராவ், அரச நகரம்)

பெர்லிஸுக்குப் பயணம்-13 (ஆராவ், அரச நகரம்)

by admin
0 comment
இவ்வளவு தூரம் போய்விட்டு சுல்தானை பார்க்காமல் வரலாமா..?
அரச மாளிகை
பெர்லிஸ் பயணத்தின் இறுதி நாள். காலை உணவுக்குப் பின் தங்கும் விடுதியில் செக் அவுட் செய்துவிட்டு குவாலா பெர்லிஸிலிருந்து ஆராவ் சென்று அரச நகர வலம் வந்து விட்டு அரண்மனையையும் பார்த்து விட்டு பின்னர் கெடா வழியாக திரும்பி பினாங்கு செல்வதாக எங்கள் திட்டம்.குவாலா பெர்லிஸிலிருந்து ஆராவ் தூரமில்லை. கிழக்கு நோக்கி 25 நிமிட பயணத்தில் ஆராவ் நகரை வந்தடைந்து விடலாம்.

மலாய் மொழியில் இந்த நகர் பண்டார் டி ராஜா ஆராவ் (Bandar Di Raja Arau) என அழைக்கப்படுகின்றது. இதன் தமிழாக்கம் ஆராவ் அரச நகரம் என்பதாகும். பண்டார் டி ராஜா என்ற சிறப்பு அரச குடும்பத்தினர் இங்கு இருப்பதால் அவ்வாறாக அழைக்கப்படுகின்றது. மலேசியா முழுமைக்கும் ஏனைய சுல்தான்கள் உள்ள மற்ற பல நகரங்களும் கூட இந்தச் சிறப்புப் பெயர் சேர்த்தே அழைக்கப்படுகின்றன. உதாரணத்திற்கு பண்டார் டி ராஜா பெக்கான், பண்டார் டி ராஜா குவாலா கங்சார் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

பெர்லிஸ் கெடாவின் ஒரு பகுதியாக 19ம் நூற்றாண்டுக்கு முன்னர் இருந்தமை பற்றி முந்தைய பதிவில் தெரிவித்திருந்தேன். மலாயாவின் இந்த வடக்குப் பகுதி அதாவது கெடா தொடங்கி அதற்கு மேல் இப்போதைய தாய்லாந்து வியட்னாம் கம்போடியா ஆகிய பகுதிகள் வரலாற்றில் பற்பல மாற்றங்களைக் கண்ட பகுதிகள். 7ம் நூற்றண்டு தொடங்கி இங்கே பற்பல அரசியல் ரீதியான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அதில் குறிப்பாக சில முக்கிய அரச வம்சங்களைப் பற்றி கிட்டும் செய்திகளை ஓரளவு இங்கே பகிர்ந்து கொள்வது இந்தத் தொடருக்கு மேலும் சிறப்பினைச் சேர்ப்பதாக அமையும் என்பதை நம்புகின்றேன்.
9ம் நூற்றாண்டு தொடங்கி 14ம் நூற்றாண்டு வரை தற்போதைய தாய்லாந்து கைமர்(Khmer) பேரரசின் ஒரு அங்கமாக இருந்தமை சிலர் அறிந்திருக்கலாம். தற்போதைய தாய் மக்கள் 13ம் நூற்றாண்டின் மத்தியில் இப்பகுதியை கைப்பற்றிய மங்கோலிய அரசின் ஒரு பகுதி என்றும் நம்பப்படுகின்றது. இவர்கள் தெற்குப் பகுதியில் தங்கள் வலிமையை பெருக்கிக் கொண்டு சுக்கோதை (Sukhothai, 1238 ) லானா (Lanna 1262) பிறகு அயோத்யா (Ayutthaya 1351) ஆகிய அரசுகளை நிர்மானித்து ஆட்சி புரிந்து வந்தனர்.இதோடு பட்டானி அரசும் அச்சமயத்தில் வலிமை மிக்க ஒரு அரசாக விளங்கியது.

பட்டானி அரசு பழமை வாய்ந்தது. 6ம் 7ம் நூற்றாண்டு காலத்தில் வலிமை மிக்க ஹிந்து அரசாக பட்டானி திகழ்ந்தது. ஆரம்பத்தில் ஹிந்து மத அரசாக விளங்கி வந்த இந்த அரசு 11ம் நூற்றாண்டில் மன்னன் இஸ்லாமிய மதத்தைத் தழுவியதால் இஸ்லாமிய நாடாக மாறியது.

படத்தைப் பார்க்க. (சிவப்பு நிறமிடப்பட்ட பகுதி)
இந்தப் பகுதியே 2ம் நூற்றாண்டில் ஹிந்து புத்த மத ஆதிக்கத்துடன் மிகப் புகழ்பெற்று விளங்கிய பான் பான் அரசு என்றும் கொள்ளலாம். அச்சமயத்தில் இன்றைய தாய்லாந்துப் பகுதியில் பெரும் புகழொடு விளங்கிய லங்காசுகா (Langkasuka) பேரரசின் தாக்கத்தினால் இங்கும் ஹிந்து புத்த மதத்தின் ஆரம்ப கால தாக்கங்கள் ஏற்பட்டு ஹிந்து புத்த மத அரசாக இவை திகழ்ந்துள்ளன. இங்கு வணிகத்திற்காக வந்து சென்ற இந்திய சீன வர்த்தகர்கள் அதிலும் குறிப்பாக சீன வர்த்தகர்களின் குறிப்பிலிருந்து இது தொடர்பான தகவல்கள் கிடைக்கின்றன என்று விக்கிபீடியா கூறுகின்றது.11ம் நூற்றாண்டில் சோழ மன்னர்களின் படையெடுப்பும் முக்கியம் வாய்ந்த ஒன்று. அக்கால கட்டத்தில் தான் சோழ மன்னர் கெடாவை கைப்பற்றி (கடாரம்) இங்கு சோழ ராஜ்ஜியத்தை சில காலங்கள் நிறுவிய காலகட்டம்.

பட்டானி அரசு, பலேம்பாங்கில் ஆட்சி செய்து வந்த ஸ்ரீ விஜய பேரரசின் (இன்றைய சுமத்ரா – இந்தோனீசிய பெறும் தீவுகளில் ஒன்று) ஒரு பகுதியாக விளங்கி வந்தது. அக்கால கட்டத்தில் ஸ்ரீ விஜயப் பேரரசே இப்பகுதியில் மிகவும் வலிமை வாய்ந்த ஒரு பேரரசாகவும் திகழ்ந்தது.

இந்தப் பட்டானி அரசின் வலிமை மிக்க காலமாக 16ம் நூற்றாண்டைக் குறிப்பிடலாம். இக்காலகட்டத்தில் நான்கு அரசியர் ஒருவருக்கு அடுத்து ஒருவர் என இந்த நாட்டை ஆட்சி செய்திருக்கின்றனர். அவர்களில் முதலாமவர் ராத்து ஹீஜாவ் (பச்சை அரசி), அடுத்து ராத்து பீரு ( நீல அரசி), அடுத்து ராத்து உங்கு (ஊதா அரசி), இறுதியாக இவ்வரிசையில் இடம் பெறுபவர் ராத்து கூனிங் (மஞ்சள் அரசி). ஏன் இவ்வகை பெயர்கள் என்று காரணம் தெரியவில்லை. ஆயினும் இந்த அரசிகளின் ஆட்சி காலத்தில் தான் சயாமிலிருந்து வந்த நான்கு பெரிய தாக்குதல்களையும் முறியடித்து தொடர்ந்து வளமான ஆட்சியை இங்கு இப்பேரரசிகள் நிலை நிறுத்தி வந்திருக்கின்றனர்.

பெர்லிஸ் அரச பரம்பரை கெடா அரச குடும்பத்திலிருந்து கிளைத்த ஒரு அரச குடும்பம்.

லங்காசுக்கா ஸ்ரீவிஜய பேரரைசின் தாக்கத்தால் அதன் வலிமையை இழந்து வந்த சமயம் 7ம் நூற்றாண்டு எனலாம். யீத்சிங் (Yi-Tsing) எனும் சீன புத்தபிக்குவின் குறிப்புக்கள் கி.பி. 685 -689 வாக்கில் கெடா ஸ்ரீ விஜயப் பேரரசின் ஒரு பகுதியாக வந்தமைக் குறிப்பிடுகின்றன. (pg 102, Early History of the Indonesian Archipelago and the Malay Peninsula, Paul Michel Munoz) இக்கால கட்டத்தில் லங்காசுக்கா மற்றும் கெடா ஆகிய நாடுகள் அனைத்திலும் திருமண இறப்பு சடங்குகள் அனைத்துமே ஹிந்து முறைப்படி நடந்து வருவதே வழக்கமாக இருந்து வந்துள்ளது.

கெடா மற்றும் லங்காசுக்கா பகுதியில் வணிகம் மிகச் செழிப்புற்றிருந்த காலம் அது. வணிகத்தோடு இங்கு வந்து சென்ற வணிகர்களில் பலர் தென்னிந்தியப் பகுதிகளிலிருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 9,ம் நூற்றாண்டு தமிழ் கல்வெட்டு ஒன்று இங்கு நஞ்யீர் உதயன் (Nangyr Udayan) என்பவன் ஒரு குளம் கட்டினான் என்பதைக் குறிப்பிடுகின்றது. இந்த குளம் வர்த்தகம் நடைபெறும் இடத்தில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டது எனவும் இதன் பெயர் மணிக்கரம் (Manikkaram) எனவும் இக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே தமிழ் கல்வெட்டு கி.பி.826 – 849ல் தென்னகத்தை ஆண்ட பல்லவ மன்னன் பெயரையும் குறிக்கின்றது. இச்செய்திகள் இக்கால கட்டத்தில் இந்தியாவின் தெற்குப் பகுதியிலிருந்து இங்கு வணிகம் செய்ய வந்த மக்களின் செய்திகளை உறுதி படுத்தும் ஆவணங்களாக உள்ளன. இக்கால கட்டத்தில் கெடா ஸ்ரீவிஜய பேரரசின் ஒரு பகுதியே.

11ம் நூற்றாண்டில் கெடாவில் ஒன்றாம் ராஜேந்திரனின் படையெடுப்பும் அதனை கைப்பற்றி கெடாவை தனது ராஜ்ஜியத்திற்குள் கொண்டு வந்தமையும் கெடா வரலாற்றில் முக்கிய செய்திகள்.

இந்த நிகழ்வுக்கு முன்னர் ஸ்ரீவிஜய பேரரசும் சோழப் பேரரசும் நல்ல உறவில் இருந்து வந்திருக்கின்றன. இதற்கு நல்ல உதாரணமாக ஒரு செய்தியை இங்கு குறிப்பிடலாம். ராஜராஜ சோழன் காலத்தில் சுமத்தாரவில் ஆண்டு வந்த ஸ்ரீ விஜய பேரரசின் மன்னர் சூலமனிவர்மதேவனின் விருப்பத்திற்கேற்ப தமிழகத்தின் நாகப்பட்டினத்தில் ஒரு புத்த ஆலயம் ஒன்றினை நிர்மானிப்பதற்காக ராஜராஜ சோழன் ஒரு கிராமத்தை தானமாக வழங்கியிருக்கின்றார். இதனை ஒரு கல்வெட்டு குறிப்பிடுகின்றது.

ராஜராஜ ராஜக்கேசரிவர்மன் தனது 21ம் ஆட்சி காலத்தில் நாகபட்டினத்தில் உள்ள ஆனைமங்களம் கிராமத்தை கெடா மற்றும் ஸ்ரீவிஜய பேரரசின் அரசனாகிய ஸ்ரீ மாரவிஜயோத்துங்கவர்மன் மகன் சூலமனிவர்மதேவனின் விருப்பத்த்தின் பேரில் புத்தருக்கு வழங்குவதாக …..

என இக்குறிப்பு வருகின்றது.

ஆனாலும் இந்த நட்புறவு நெடு நாட்கள் நீடிக்கவில்லை.ராஜராஜ சோழனின் படைகள் முதலில் கி.பி. 1007ல் கெடா நாட்டை தாக்கியுள்ளன. கிபி 1014ல் ராஜேந்திர சோழன் பதவியேற்ற பின்னர் இப்பேரரசின் பற்பல வெற்றிகளுக்குப் பின்னர் கெடாவையும் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் ஸ்ரீ விஜயப் பேரரசோடு போர்தொடுத்து கெடாவை கைப்பற்றினான். இதற்கு முக்கிய காரணமாக இருப்பது வணிகம் என்பது ஆய்வாளர்களின் கருத்து என இன்னூலில் குறிப்பிடப்படுகின்றது. (Early History of the Indonesian Archipelago and the Malay Peninsula, Paul Michel Munoz)

இதில் சிறப்பென்வென்றால் இந்தப் போர, கெடாவை கைப்பற்றிய செய்திகள் அனைத்தும் தஞ்சை ராஜாராஜேஸ்வரம் கோயிலில் உள்ள கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டுள்ளமையாகும். (South India Inscription pg 205)

கெடா மட்டுமின்றி ராஜேந்திர பேரரசனின் படைகள் மலாயா தீபகற்பத்தின் மேலும் ஆறு பகுதிகளை கைப்பற்றியதாகவும் அதே சமயத்தில் நிக்கோபார் தீவுகளையும் கைப்பற்றியதாகவும் இணையத்தில் இப்பக்குதி குறிப்பிடுகின்றது. http://www.pekemas.org.my/index.php?option=com_content&view=article&id=109:kesultanan-negeri-kedah&catid=5:asal-usul&Itemid=2

கெடா நாட்டை ஸ்ரீ விஜய மன்னரின் ஆட்சியிலேயே விட்டு விட்டு தனது ஆட்சிக்குட்படுத்த்்ப்பட்ட ஒரு பகுதியாக ஆக்கி திரை செலுத்தும் வகையில் வைத்துச் சென்ற பின்னர் இப்பகுதி சில காலங்கள் போர் இன்றி அமைதியாக இருந்து வந்தது. ஆனாலும் சோழர்களின் படைகள் கெடாவிலிருந்து சென்ற பின்னர் ஆச்சேயின் தாக்கத்தாலும் ஜம்பி பலேம்பாங் பகுதியில் ஏற்பட்ட மாற்றங்களினாலும் கெடாவை ஆட்சி செய்து வந்த மன்னர் இஸ்லாமிய மதத்தை தழுவி இஸ்லாமிய நாடாக கெடாவை பிரகடனப்படுத்தினார். இந்த மன்னர் ஒன்பதாவதாக இம்மன்னர் பரம்பரையில் வருபவர். மஹாராஜா மஹாஜீவா “ப்ராஓங் மஹாவங்சா” என்ற தனது ஹிந்து பெயரை சுல்தால் முஸ்ஸாஃபார் ஷா என மாற்றிக் கொண்டார். இந்த மன்னர் மலாயாவின் வடக்குப் பகுதியை 1136 முதல் 1179 வரை ஆண்டவர்.

இதற்கு முன்னர் இப்பரம்பரையில் வந்த மன்னர்கள்

-மஹாராஜா தர்பராஜா (லங்காசுக்காஆட்சியை தோற்றுவித்த மன்னன்)
-மஹாராஜா டீராஜா புத்ரா
-மஹாராஜா மஹாதேவா
-மஹாராஜா கர்னடிராஜா
-மஹாராஜா கர்மா
-மஹாராஜா தேவா II
-மஹாராஜா தர்மராஜா I
-மஹாராஜா மஹஜீவா “ப்ராஓங் மஹாவங்சா”

இதற்குப் பிறகு இம்மன்னர் பரம்பரையின் பெயர்களைக் கீழுள்ள பட்டியலில் காணலாம்.

* Paduka Sri Sultan Muzaffar Shah I (1136–1179), styled “Phra Ong Mahawangsa” by the Siamese. Styled “Sri Paduka Maharaja Durbar Raja” before his accession.
* Sultan Muazzam Shah (1179–1201)
* Sultan Mohammed Shah (1201–1236)
* Sultan Maazul Shah (1236–1280)
* Sultan Mahmud Shah I (1280–1320)
* Sultan Ibrahim Shah (1320–1373)
* Sultan Sulaiman Shah I (1373–1422)
* Sultan Atadullah Muhammed Shah (1422–1472)
* Sultan Muhammed Jiwa Zainal Abidin I (1472–1506)
* Sultan Mahmud Shah II (1506–1546)
* Sultan Muzaffar Shah II (1546–1602)
* Sultan Sulaiman Shah II (1602–1625)
* Sultan Rijaluddin Shah (1625–1651)
* Sultan Muhiyuddin Shah (1651–1661)
* Sultan Ziauddin Al-Mukarram Shah (1661–1687)
* Sultan Atadullah Muhammed Shah II (1687–1698)
* Sultan Abdullah I Al-Muazzam Shah (1698–1706)
* Sultan Ahman Tajuddin Halim Shah I (1706–1709)
* Sultan Abdullah II (1709–1723)
* Sultan Atadullah Muhammed III (1723–1741)
* Sultan Muhammed Jiwa Zainal Abidin II (1741–1778)
* Sultan Abdullah Makarram Shah III (1778–1797)
* Sultan Ziyauddin Mukarram Shah II (1797–1803)
* Sultan Ahmad Tajuddin II Halim Shah (1803–1843)
* Sultan Zainal Rashid Muadzam Shah II (1843–1854)
* Sultan Ahmad Tajuddin III Mukarram Shah (1854–1879)
* Sultan Zainal Rashid Muadzam Shah III (1879–1881)
* Sultan Abdul Hamid Halim Shah (1881–1943)
* Sultan Badli Shah (1943–1958)
* Sultan Abdul Halim Muadzam Shah (1958-)
( http://www.pekemas.org.my/index.php?option=com_content&view=article&id=109:kesultanan-negeri-kedah&catid=5:asal-usul&Itemid=2 )

இந்த பட்டியலில் Sultan Ziauddin Al-Mukarram Shah (1661–1687) மன்னரே பெர்லிஸ் நகரை உருவாக்கிய மன்னர்.

பெர்லிஸின் தற்போதைய சுல்தான் பரம்பரை ஜலாலுல்லாய் பரம்பரையினர்.
மேலுள்ள பட்டியலில் காணப்படும் சுல்தான் அஹ்மட் தாஜுடின் (Sultan Ahmad Tajuddin II Halim Shah (1803–1843) ) ஜாலாலுல்லாய் பரம்பரையினருக்கு பெர்லிஸை ஆட்சி செய்யும் பொறுப்பை 1843ல் வழங்கினார். மலேசியாவின் ஏனைய அரச பரம்பரையினர் கொண்டுள்ள சுல்தான் என்ற சிறப்புப் பெயர் இல்லாமல் இந்த ஜலாலுல்லாய் பரம்பரையினர் ராஜா என்ற பெயரைத் தாங்கி வரும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர்.

அந்தவகையில் இப்பரம்பரையினரின் ராஜ குடும்பத்தினரின் பெயர்களைக் கீழுள்ள பட்டியலில் காணலாம்.
-Raja Syed Ahmad Jamalullail (1873–1887)
-Raja Syed Saffi Jamalullail (1887–1905)
-Raja Syed Alwi Jamalullail (1905–1943)
-Raja Syed Hamzah Jamalullail (1943–1945)
-Raja Syed Putra Jamalullail (1945–2000)
-Raja Syed Sirajuddin Jamalullail (2000–.)

 

ஆக தற்சமயம் பெர்லிஸ் மானிலத்தின் ஆட்சிப் பொறுப்பில் அரசராக இருப்பவர் ராஜா சையத் சிராஜூடின் ஜமாலுல்லாய் அவர்கள் ஆவார்.

 

அரச குடும்பத்தினரின் படம்

அரச மயானம்

அரச அருங்காட்சியகம்

 

இந்த அரச மாளிகை, அருங்காட்சியகம், மயானம் அனைத்துமே ஆராவ் நகரின் மையத்திலேயே அமைந்துள்ளன.

-முனைவர்.க.சுபாஷிணி

You may also like

Leave a Comment