மலேசிய நாட்டுப்புற பாடல்கள் காட்டும் தமிழர் வாழ்வியல்
பாஸ்கரன் நடேசன்
முன்னுரை
இவ்வாய்வுக் கட்டுரையானது, நாட்டுப்புறவியல் வழக்காறுகளில் ஒன்றான நாட்டுப்புறப் பாடல்களை ஆராயும் முயற்சியாகும். “இலக்கியத்தைப் புரிந்து கொள்ள நாட்டின் இதய பாவம் தெரிய வேண்டும். கிராமத்துப் பாட்டுக்களே அதற்குச் சான்றுகள்” என்று புதுமைப்பித்தன் கூறுவது போல், பத்தொன்பதாம் நூற்றாண்டில் மலேசிய மண்ணில் ரப்பர் தோட்டங்களில் குடியேறிய தமிழர்களின் வாழ்வியல் நிலையை நன்கறிய அவர்களின் வாய்மொழிப் பாடல்களே சான்றாகும். மலேசிய நாட்டுப்புறப் பாடல்களில் காணப்படும் தமிழர் வாழ்வியல் கூறுகளை ஆராய்தல் இக்கட்டுரையின் நோக்கம்.
தோட்டப்புற அடிமை வாழ்க்கை
19-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் தமிழ் நாட்டிலிருந்து தமிழர்களை ‘சஞ்சிக் கூலிகளாக மலாயா ரப்பர் தோட்டங்களில் வேலை செய்யக் கொண்டுவந்தனர் என்பது வரலாற்று உண்மையாகும். 1921ஆம் ஆண்டுமுதல் 1957ஆம் ஆண்டு வரையில் மலேசியாவில் குடியேறிய தமிழர்களின் எண்ணிக்கை 6,34,681 பேர் ஆகும் என்று அரசரத்னம் (1970) குறிப்பிடுகின்றார். மலாயாவில் வேலை செய்து அதிகம் சம்பாதிக்கலாம் என்ற கங்காணிகளின் ஆசை வார்த்தைகளில் மயங்கி இங்கே வந்தவர்கள்தான் தமிழர்கள். ஆனால் இங்கே நிலைமை அப்படி அல்ல என்பது அவர்கள் இங்கே காடுகளில் அடைக்கலம் புகும்போதுதான் உண்மைப் புரிந்தது. அரசனாகலாம் என்று வந்தவர்கள் இங்கே அடிமைப்படுத்தப்பட்ட நிலையை பாடுகிறான் ஒரு தமிழன் இப்படி:-
“பாலு மரம் வெட்டலான்னு
பழைய கப்பல் ஏறி வந்தோம்
நாப்பத் தஞ்சு காசு போட்டு
நட்டெலும்ப கழட்டுறானே
முப்பத் தஞ்சு காசு போட்டு
மூக்கெலும்ப கழட்டுறானே.” (பக்கம்-19)
என்ற பாடல் அடிமைத்தனத்தின் உச்சத்தைக் காட்டுகின்றது. குறைந்த கூலியைக் கொடுத்து அதிகமான வேலைச் சுமையைக் கொடுக்கும் ஆங்கிலேயனின் மனிதாபிமானமற்ற செயலுக்கு ஆட்பட்ட தமிழரின் நிலை வருந்தத்தக்கதாகும்.
போர்காலத் துயரம்
இரண்டாம் உலகப்போரின் போது (1941-1945), மலாயா ஜப்பானியர் ஆட்சிக்குட்பட்டது. ஜப்பானியரின் ஆட்சியின் போதும் இங்கு வாழ்ந்த தமிழர்களின் வாழ்க்கை, துயரம் நிறைந்ததாகவே காணப்படுகின்றது. சயாமிலிருந்து பர்மா நாட்டுக்கு இரயில் வண்டிப்பாதை அமைப்பதற்கு, மலாயாவிலிருந்து தமிழ் இளைஞர்களை ஜப்பானியர்கள் அழைத்துச் சென்றனர். அங்கு அவர்கள் பட்ட துன்பத்தை இப்பாடல் வழி அறிய முடிகிறது.
“பேயா மழையில்
பெருத்த வெயிலில்
வேலை செய்தோமே – அவன்
குர்ரா கூரா என்று சொல்லி
உதையும் பட்டோமே அய்யா
உதையும் பட்டோமே!” (பக்கம்-29)
மேலும் மரண இரயில் பாதையமைக்கச் சென்று மாண்டவர்களின் எண்ணிக்கையையும் பாடியுள்ளனர்.
“சீயமுக்குப் போன இந்தியர்கள்
ஆறுலட்சம் பேரு
மீந்து மீதி இருப்பவங்க
ரெண்டு லட்சம் பேரு – அய்யா
ரெண்டு லட்சம் பேரு.” (பக்கம்-30)
மலாயா நாட்டுக்குக் கொண்டு வந்த தமிழனை எப்படி வேண்டுமானாலும் பந்தாடலாம் என்ற வரலாற்று உண்மையை இப்பாடல்கள் பறைசாற்றுகின்றன.
கங்காணிகளின் கொடுமை
காலனியாதிக்க நாடுகளில் வேலை செய்யக் கூலிகளை அமர்த்துவதற்காக பிரிடிஷ்காரர்களால் நியமிக்கப்பட்ட இடைத்தரகர்கள் கங்காணிகள் எனப்பட்டனர் என்று இராமநாதன்.ஆறு (1997:147) குறிப்பிடுகின்றார். மலேசிய தோட்டப்புற தமிழர்கள், கங்காணிகளால் துன்புறுத்தப்பட்ட நிலையை எடுத்தியம்பும் பாடல்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. கங்காணிகளின் கொடுமையைச் சித்தரிக்கும் பாடல் ஒன்று:-
“கங்காணி மார்செய்யும் கொடுமையிலே
கதறுகிறோம் கித்தா மரத்திலே!
மரத்தில் உடனே காயம் பட்டால்
அறைந்திடுவார் ஒரு அறையிலே
ஆண்டவன் உதவி இல்லை என்று
அழுகின்றோம் கித்தா மரத்திலே!” (பக்கம்-55)
பெண்களின் நிலை
மலாயா நாட்டிற்கு அதிக அளவில் பெண்களையும் ஆங்கிலேயர் கொண்டுவந்துள்ளனர். ரப்பர் தோட்டங்களில் பெண்கள் பட்ட துன்பங்களும் அவர்களின் பாடல்களிலே வெளிப்பட்டுள்ளது. கட்டிய கணவனைப் பிரிந்து கண்கலங்கி நிற்கும் ஒரு காட்சி :
“மலாய் நாட்டில பெண்கள்
கட்டுன துணியோடு கண் கலங்குகிறார்
மலாய் நாட்டிலே…
கட்டுன புருஷன விட்டுவிட்டு
கண் கலங்குகிறார் மலாய் நாட்டிலே!” (பக்கம்- 8)
தெய்வ நம்பிக்கை
மலேசிய தோட்டப்புறத்தில் வாழ்ந்த தமிழர்கள் மிகுந்த தெய்வ நம்பிக்கைக் கொண்டவர்களாக வாழ்ந்துள்ளனர். இந்தத் தெய்வ நம்பிக்கை அவர்கள் புலம்பெயர்ந்து வந்த நாட்டின் தெய்வ நம்பிக்கையின் தொடர்ச்சியாகும். முருகன், பிள்ளையார், மாரியம்மன், காளி, ஆதிபராசக்தி போன்ற தெய்வங்களின் பாடல்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
முருகனைப் பற்றி வழங்கும் நாட்டுப்புறப்பாடல் பின் வருமாறு:
“வெள்ளிமலையாண்டி பெத்த
வேல்முருகன் ஆண்டியடி
புள்ளி மயில் வாகனத்தில்
பூஞ்சோல மயில
போற்றி துதிப்போமடி என்
பூஞ்சோல குயில!” (பக்கம் -269)
குடிப்பழக்கம்
“குடி குடியைக் கெடுக்கும்” என்பது வழக்கு மொழி. அந்த குடியால் தோடப்புறத் தமிழர்களின் வாழ்க்கைப் பாலானதை மலேசிய நாட்டுப்புறப்பாடல்கள் பறைசாற்றுகின்றன. இளைஞர்கள் கற்குடியால் சீரழிந்த பாடல் வரிகள் :
கற்குடியால் பாடுபட்டு சம்பாதித்தப் பணம் விரயமானதை:
“காசு போச்சுதடி ஆத்தா
களப்பு சோறு திங்க போயி
பொழப்புப் போச்சுதடி
கள்ளுக் குடிக்க போயி
காசு போச்சுதடி ஆத்தே!” (பக்கம் – 234)
குடிப்பழக்கத்தால் மனைவியை அடிக்கும் கணவன்மார்களையும் மலேசிய நாட்டு நாட்டுப்புறப் பாடல் ஒன்று சித்தரிக்கின்றது. மரத்திலிருந்து இறக்கிய கள்ளில் தேள் இருந்தால் அதை வீசிவிட்டு கல்லைக் குடிக்கிறான். ஆனால் வீட்டில் மனைவி சமைத்த சோற்றில் கல் இருக்கக் கண்டால் அவளை அடித்துத் துன்புறுத்துகிறான்.
“கள்ளுக்குள தேளிருந்தா
தள்ளிப்புட்டு குடிக்கச் சொல்லும்
சோத்துக்குள்ள கல்லிருந்தா
பொண்டாட்டியை அடிக்கச் சொல்லும்!” (பக்கம் – 86)
முடிவுரை
மலேசிய நாட்டில் பல்லாண்டுகள் மலாயா பல்கலைக்கழகத்தில் விரிவுரைஞராகப் பணியாற்றிய டாக்டர்.இரா.தண்டாயுதம், மலேசிய நாட்டுப்புறப் பாடல்களைத் தேடித் திரட்டி இந்நாட்டு மக்களுக்கு ஒரு பொக்கிசமாக நூல் வடிவில் கொடுத்துள்ளார். அந்த பொக்கிசம் இந்நாட்டு தமிழர்களின் ஆரம்பக் கால உண்மை வரலாற்றைப் பறைசாற்றும் வரலாற்றுப் பதிவாகும். மலேசிய நாட்டுப்புறப் பாடல்களைப் பற்றிய ஆழமான திறனாய்வு மேற்கொள்ளப்படவேண்டும். அவற்றை ஆவனப்படுத்தி இந்நாட்டின் நாட்டுப்புறப் பாடல்களை மக்கள் அறியச் செய்ய வேண்டியது உடனடித் தேவையாகும். இல்லையேல் மலேசிய நாட்டுப்புற இலக்கியம் மடிந்து போகும்.
மேற்கோள் நூல்கள் :
அழகப்பன்.ஆறு.,(2009), நாட்டுப்பறப் பாடல்கள் திறனாய்வு, பாரி நிலையம், சென்னை.
தண்டாயுதம்.இரா.,(1998), மலேசிய நாட்டுப்புறப் பாடல்கள், தமிழ்ப் புத்தகாலயம்