ஶ்ரீ மாரான் மரத்தாண்டவர் ஆலயம் 100 ஆண்டுகளுக்கும் மேலான பழம்பெரும்பெரும் கோவில்களில் ஒன்றாகும். மலேசியாவில் இது போன்ற கோவில்கள் பல உள்ளன. கீழே கொடுக்கப்பட்டிருக்கும் ஆலய வரலாறு https://www.kaumaram.com/aalayam/index_maran.html எனும் வலைப்பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டது. மேல்விபரங்களுக்கு பகிரப்பட்டிருக்கும் மின்வலை முகவரியை சொடுக்கவும்.
ஆலய வரலாறு
( 2001-ஆம் ஆண்டில் கௌமாரம் இணைய ஆசிரியரிடம் ஆலயத்தின் அன்றைய தலைமை அர்ச்சகர் ஸ்ரீ கே.எஸ். கணபதி கூறியது )
சுமார் 120 வருடங்களுக்கு முன் கோலாலம்பூரிலிருந்து குவாந்தான் நகருக்கு சாலை போடும் வேலை நடந்துகொண்டிருந்தது. ஒரு பெரிய மரத்தை வெட்டும்போது அதிலிருந்து இரத்தம் கசிந்தது.
அதே வேளையில் மரம்வெட்டிக்கொண்டிருந்த தமிழர் ஒருவருக்கு அருள் வந்து, அவர் அந்த மரத்தை வெட்டக்கூடாதென்றும் சாலையைச் சிறிது தூரத்திற்கு அப்பால் போடவேண்டுமென்றும் சொன்னார். அதைச் செய்ய மறுத்தார் ஆங்கிலேய மேற்பார்வையாளர். உடனே சிறிய குழந்தை வடிவுகொண்ட தழும்பு அந்த மரத்தில் தோன்றியது. அதைப்பார்த்து வியந்த மேற்பார்வையாளர் மரத்தை வெட்டாமல் சாலையை சிறிது தூரத்திற்கு அப்பால் போட உத்தரவிட்டார்.
அன்றிலிருந்து அந்த இடம் ஒரு புனித இடமாகியது. ஸ்ரீ மரத்தாண்டவ பால தண்டாயுதபாணி என்ற பெயர் அமைந்தது. இங்கு தூய பக்தியோடு வருபவர்களுக்கு எல்லா நன்மைகளும் வந்து சேர்கின்றன. ஊனமுற்றோர் நடப்பது, ஊமைகள் பேசுவது, நோயுற்றோர் குணமாவது போன்ற அற்புதங்கள் பல இங்கு நிகழ்ந்து வருகின்றன.
“நான் இந்தக் கோயிலுக்கு 1955ம் ஆண்டில், என் முப்பதாவது வயதில் வந்தேன். மாதச் சம்பளம் அப்போது 20 ரிங்கிட்தான். அந்தக்காலத்தில் இந்தக்கோயில் வெறும் தகரத்தாலும் மரப்பலகையாலும் அமைந்திருந்தது. அப்போதெல்லாம் இங்கு அடிக்கடி நிகழும் அற்புதம் என்னவென்றால், இந்தச் சாலையில் செல்லும் வாகனம் ஏதும் நிற்காமல் சென்றால் சிறிது தூரம் சென்றவுடன் ஓடமுடியாமல் நின்றுவிடும். கோயிலிலிருந்து விபூதியை தேய்த்தபின்தான் மீண்டும் ஓடும். பங்குனி உத்திரம்தான் இந்தக் கோயிலின் மிகச் சிறப்பான நாள். பல பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேறுகின்றன. அந்தக்காலத்தில் சுமார் 500 அர்ச்சனைகள் நடைபெறும். இப்போது 300,000 மேல் அர்ச்சனைகள் நடைபெறுகின்றன.”
ஏன் இத்தனைக் காலமாக இங்கேயே இருக்கிறீர்கள் என்று கேட்டபோது அவர் சொன்னார்,
1962ல் நான் ஒரு கனவு கண்டேன். அதில் சுமார் 200 வருடங்களுக்கு முன்னர் இங்கே வசித்த ஒரு முருகபக்த மகான், இந்தக் கோயிலுக்குப் பக்கத்தில் இருக்கும் ஓடையில் குளித்துவிட்டு, இந்த மரத்தினுள் ஐக்கியமானதைக் கண்டேன். அதே மகான் கனவில் என்முன் தோன்றி இங்கேயே என்னைச் சேவை செய்யச் சொன்னார். அதன்படிதான் நான் முழுமனதோடு இங்கே சேவை செய்துவருகிறேன்.”