Home இலக்கியங்கள்கட்டுரைகள் பெர்லிஸுக்குப் பயணம்-5 (பெர்லிஸ் மாநில கோயில்கள்)

பெர்லிஸுக்குப் பயணம்-5 (பெர்லிஸ் மாநில கோயில்கள்)

by admin
0 comment

கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று எண்ணம் கொண்டு செல்லும் இடங்களிலெல்லாம் கோயில்களை அமைத்து வளம் சேர்ப்பவர்கள் தமிழர்கள். மலேசியாவிலேயே மிகக் குறைவாக தமிழர்கள் வாழும் இச்சிறிய மானிலமான பெர்லிஸிலும் ஆலயங்கள் உள்ளன என்பதை தெரிந்து கொள்ளும் போது மனம் பரவசமடைகின்றது இல்லையா?

பெர்லிஸ் மானிலத்தில் 4 கோயில்கள் இருக்கின்றன. அவை,
– கங்கார் நகரிலுள்ள ஆறுமுகசாமி ஆலயம்
– கங்காரிலேயே உள்ள ஸ்ரீ வீர மஹா காளியம்மன் ஆலயம்
– ஆராவ் நகரிலுள்ள ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயம்
– பாடாங் பெஸார் நகரிலுள்ள ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயம்

ஆகிய நான்குமாகும்.

ஆராவ் அரச நகரம். இங்கு தான் பெர்லிஸ் சுல்தானின் அரண்மணையும் ஏனைய அரசாங்க அலுவலகங்களும் உள்ளன. இங்கு சமீபத்தில் கடந்த ஆரேழு ஆண்டுகளுக்குள் தான் புதிதாக ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயம் கட்டப்பட்டுள்ளது.

பாடாங் பெஸார் நகர் பற்றி முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். தாய்லாந்தின் எல்லையில் அமைந்த நகரம் இது. இங்கு மீனாட்சியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலைப் பார்க்கும் வாய்ப்பு எனக்கு அமையவில்லை. அதனால் விரிவாக இப்பதிவில் குறிப்பிட இயலவில்லை.


அடுத்ததாக கங்கார் நகரிலுள்ள ஆறுமுகசாமி ஆலயம். இந்த ஆலயத்தின் பக்கத்திலேயே தான் ஸ்ரீ வீர மகா காளியம்மன் ஆலயமும் அமைந்துள்ளது. ஆக இரண்டையுமே பக்கத்திலேயே பார்க்கலாம்.

கங்கார் ஒருமுக்கிய நகரம் என்ற போதிலும் பசுமை எழில் கொஞ்சமும் குறையாத ஒரு நகரம். இந்த ஆறுமுக சாமி கோயில் பசுமையான சிறு குன்று போன்ற ஒரு பகுதியில் தான் அமைந்துள்ளது. கங்கார் நகரின் முக்கிய சாலையைக் கடந்து உள்ளே சென்றால் சுலபமாக இக்கோயிலை நாம் கண்டுபிடித்து விடலாம்.

இக்கோயிலுக்கு மதியம் நேரம் செல்வது போல எங்கள் பயணம் அமைந்தது. ஆக ஆலயம் பூட்டப்பட்டிருக்குமோ என்ற சந்தேகம் இருந்தது. ஆனாலும் ஆலயத்தின் வாசல் திறந்திருந்தது. அத்துடன் எங்களைப் பார்த்த ஆலய பொறுப்பாளர் ஒருவர் எங்களை ஆலயத்தின் அலுவலகத்துக்கும் அழைத்துச் சென்று தேனீர் பானமும் பழங்களும் வழங்கி அன்புடன் உபசரித்தார். அவறுடன் மேலும் சிலரும் எங்களுடன் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்ததோடு மட்டுமல்லாமல் கோயில் பற்றிய தகவல் அடங்கிய சிறு கையேடு, மாசி மகம் திருவிழா அழைப்பிதழ் ஆகியவற்றோடு ஒரு தேவார பாடல்கள் அடங்கிய நூல் ஒன்றையும் எங்களுக்கு வழங்கினர்.

பெர்லிஸ் நகரில் அமைந்திருக்கும் ஒரே முருகன் கோயில் இது தான். ஆறு முகங்களுடன் கூடிய ஆருமுகசாமியாக இங்கே இறைவன் கருவரையில் வள்ளி தேவையானைசயுடன் அமைந்திருக்கின்றார். மூலமூர்த்தியின் சிலை கருங்கல்லால் அமைக்கப்பட்ட சிலை.

பெர்லிஸ் மானிலத்தில் இக்கோயில் அமைக்கும் எண்ணம் முதலில் 1965ம் ஆண்டு வாக்கில் எழுந்துள்ளது. இப்பணியில் முழுமையாகத் தங்களை ஈடுபடுத்திக் கொண்டவர்களில், மறைந்த திரு.எம்.கே.கோவிந்தசாமி அவர்கள், மறைந்த திரு.எஸ்.சதாசிவம் அவர்கள், மறைந்த திரு.வி.கோவிந்த சாமி நாயுடு அவர்கள், மறைந்த திரு.கேஜி.ராவ் அவர்கள் மற்றும் மறைந்த திரு. அழகுமலை ஆகியோர் மிக முக்கியமானவர்கள். இக்கோயில் அமைப்பதற்கான முதல் சந்திப்பினை இவர்கள் ஆராவ் நகரிலிருக்கும் மறைந்த திரு. எஸ் சதாசிவம் அவர்கள் இல்லத்தில் 3.6.1965 அன்று நடத்தினர். கங்கார் நகரில் ஒரு ஹிந்து ஆலயம் அமைக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் இச்சந்திப்பின் வழி முதன் முதலாக உருவாக்கம் கண்டது.

இதனை அடுத்து 2.7.1965 அன்று பெர்லிஸ் மானிலத்திலுள்ள ஹிந்துக்கள் பெர்லிஸ் இந்தியர் சங்கத்தில்ஒன்று கூடி இந்த எண்ணம் பற்றி விரிவாக பேசப்பட்டது. இக்கூட்டத்தினை மறைந்த டாக்டர்.சிவசம்பந்தன் அவர்கள் தலைமையேற்று நடத்தி வைத்திருக்கின்றார். இதற்கு அடுத்த சில நாட்களிலேயே டாக்டர்.சிவசம்பந்தன் அவர்கள் பினாங்கு மானிலத்திற்குத் தொழில் நிமித்தம் மாற்றலாகிச் சென்றதால் மறைந்த திரு.வி.கே.கோவிந்த சாமி நாயுடு அவர்கள் கோயில் கட்டுமான குழுவின் தலைவராக நியமனம் செய்யபப்ட்டு இப்பணியை ஆரம்பித்திருக்கின்றனர். கோயில் ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி தேவஸ்தானம் என பதிவு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன.

முனைவர்.க.சுபாஷிணி

You may also like

Leave a Comment