லிட்டல் இந்தியா

பினாங்கின் பல மூலைகளில் தமிழர்கள் வர்த்தகத்தில் ஈட்டுபட்டிருந்தாலும் Little India என்று சொல்லப்படும் பகுதியில்தான் ஏராளமான இந்தியர்களுக்கானப் பொருட்கள் விற்கப்படும் கடைகளைக் காண முடியும். தீபாவளி, தைப்பூசம் மற்றும் பிற விழாக்காலங்களில் இந்தப் பகுதியில் நடப்பதற்கே இடம் இல்லாத வகையில் கூட்டத்தைக் காண முடியும். மலேசியாவிலேயே மிகப் பிரபலமான வர்த்தகப் பகுதிகளில் ஒன்றாக இது கருதப்படும் அளவுக்கு இங்கு கிடைக்கும் பொருட்கள் தரத்திலும் விதத்திலும் சிறந்து விளங்குவதைக் காண முடியும்.

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சேலைகளையும் துணி வகைகளையும் விற்பனை செய்யும் சேலைக் கடைகள் இங்கு மிகப் பிரபலம். ஹனீபா, அனிதா, V.K.N., உமையாள், குமரன்’ஸ் என பல கடைகள் இங்கே. சென்னையின் பாண்டி பஜார், ரங்கநாதன் தெருக்களில் கிடைக்கக் கூடிய எல்லா துணிகளும் இங்கேயும் கிடைக்கின்றன.
மற்றும் புதிய தமிழ், ஹிந்தி பாடல் ஒலிப்பேழைகள், படங்கள், பாத்திரங்கள், அலங்காரப் பொருட்கள் என பல தினுசுகளில் இங்கே பொருட்களைப் பெற்றுக் கொள்ள முடியும். இந்த சாலைகளில் நடக்கும் போதே தமிழ் பாடல்கள் பல திசைகளிலும் ஒலிப்பதைக் கேட்க முடியும். இது முற்றிலும் தமிழர்களின் தெருவாகவே மாறிவிட்டிருக்கின்றது.
இந்திய உணவுகளுக்கும் இங்கு பஞ்சமில்லை. இப்பகுதியிலுள்ள எல்லா தெருக்களிலும் இந்திய பலகாரங்கள் விற்கப்படும் கடைகள் உள்ளன. சுடச் சுட தோசை, பரோட்டா, சாதம் எல்லாம் கிடைக்கக் கூடிய இடம் இது.

தமிழர்கள் நகைப் பிரியர்கள் என்பதால் இங்கு தங்க வைர நகைகள் விற்கப்படும் கடைகளுக்கும் பஞ்சமில்லை. மக்கள் கூட்டம் விழாக்காலங்களில் ஈக்கள் மொய்ப்பது போல இங்கு கூடியிருப்பது தவிர்க்க முடியாத ஒரு காட்சி.

இந்தப்பகுதிக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் இந்தப் பகுதியின் ஆரம்பத்திலேயே மகாமாரியம்மன் ஆலயம் ஒன்றும் இருக்கின்றது. மிகப்பழமையான இந்த ஆலயம் புதுப்பிக்கப்பட்டு அழகாக பாதுகாக்கப்படுகின்றது. இந்த ஆலயத்தில் ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் நடைபெறும் ராகு கால துர்க்கை அம்மன் பூஜை மிகச் சிறப்பானது. தமிழகத்தில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தக் கூடிய வகையில் பினாங்கின் மையப்பகுதியில் அமைந்துள்ள பகுதி இது.

க.சுபாஷிணி

Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *