பெர்லிஸுக்குப் பயணம்-1

மலேசியாவில் 13 மாநிலங்கள் உள்ளன . கிழக்கு மலேசியா (போர்னியோவில்) மலேசியாவின் மாநிலங்களான சபா சரவாக் இரண்டும் உள்ளன. இதைத் தவிர்த்து புருணை என்னும் தனி ஒரு நாடும் தெற்கு போர்னியோவின் முழுமையும் ஆக நான்கு நாடுகளைக் கொண்ட ஒரு தீவு இந்த போர்னியோ தீவு. போர்னியோ தீவின் 73% பகுதி இந்தோனிசியாவைச் சேர்ந்தது. இப்பகுதி களிமந்தான் எனப் பெயர் கொண்டது. இத்தீவு உலகின் மூன்றாவது பெரிய தீவு. களிமந்தான் (இந்தோனிசியப் பகுதி) புருணை, மலேசியாவின் இந்த இரண்டு மானிலங்கள் ஆகிய இவற்றிற்கு அதிகாரப்பூர்வ மொழி மலாய் மொழியாகும். ஆயினும் பழங்குடி மக்களின் பல்வேறு மொழிகள் இங்கு இன்றளவும் வழக்கில் உள்ளன என்பது குறிப்பிட வேண்டிய ஒரு விஷயம். போர்னியோ. சபா சரவாக் மானிலங்களைப் பற்றி பின்னர் மேலும் பார்க்கலாம். இப்போது எனது பயண திட்டத்திற்கு மீண்டும் வருகின்றேன். மேற்கு மலேசியாவில் உள்ள ஏனைய பதினோரு மானிலங்களில் மிகச் சிறியதும் தாய்லாந்தின் எல்லைப் பகுதியில் அமைந்திருப்பதுமான பெர்லிஸ் மானிலத்தை இம்முறை பார்த்து வரலாம் என முடிவானது. நான் எனது பள்ளிக் காலத்திலும் கூட பெர்லிஸ் மானிலம் சென்றதில்லை. அதற்கான வாய்ப்பும் அமையவில்லை.

பினாங்கு தீவைக் கடந்து மாநிலத்தின் எல்லையைக் கடந்து வடக்கு நோக்கி பயணித்தால அடுத்து வருவது கெடா மானிலம். கடாரம் எனும் 6ம் நூற்றாண்டு பல்லவப் பேரரசின் பெயரை இன்னமும் தாங்கி நிற்கும் ஒரு மானிலம் இது. கடாரம் 6ம் நூற்றாண்டிலிருந்து 12ம் நூற்றாண்டு வரை இந்து, புத்த மத வழிபாட்டைக் கொண்டிருந்த ஒரு அரசாகத் திகழ்ந்தது. இங்கு அகழ்வாராய்ச்சியின் போது கண்டெடுக்கப்பட்ட புதையுண்ட கோயில்களைப் பற்றிய எனது கட்டுரை ஒன்றினை மரபுவிக்கியில் இங்கே காணலாம். 12ம் நூற்றாண்டுக்குப் பின்னர் பாரசீக, அராபிய தாக்கங்களால் கொஞ்சம் கொஞ்சமாக இஸ்லாமிய மதத்தைத் தழுவி இஸ்லாமிய ராஜ்ஜியமாக மாறியது கெடா. கெடாவின் இன்றைய சுல்தான் அதே பண்டைய ராஜ்ஜியத்தின் வம்சாவளியைச் சார்ந்தவர் என்பதையும் இங்கே குறிப்பிடவேண்டும்.


கெடா மாநிலத்தைப் பொருத்தவரை இந்தியத் தாக்கம் என்பது பல்லவப் பேரரசோடு முடிந்து விடவில்லை. 19ம், 20ம் நூற்றாண்டு வாக்கில் காலணித்துவ ஆட்சியின் போது மலேசியாவிற்குத் தென் தமிழகத்திலிருந்து வந்தவர்கள் அதிகம் பேர். மலேசியாவின் ஏனைய பகுதிகளுக்குப் பிரித்தானிய காலனித்துவ அதிகாரிகளால் ரப்பர் செம்பனை தோட்டங்களில் பணி புரியவும், இரயில் பாதை அமைக்கவும் கூலி வேலைக்காக வரவழைக்கப்பட்டவர்கள் போலல்லாமல் கெடா மானிலத்திற்கு வந்தவர்கள் பெரும்பாலும் வியாபாரம் செய்வதற்காக வந்தவர்கள். கெடா மானிலத்தில் கணிசமான அளவில் தமிழர்கள் இருக்கின்றார்கள் என்பதுடன் வியாபாரத்துறையில் ஈடுபட்டு செல்வந்தர்களாகவும் கல்வித்துறையில் மேம்பட்டவர்களாகவும் உள்ளனர் என்பதுவும் உண்மை. கெடா மானிலத்தின் வடக்கு எல்லையைக் கடந்து மேலும் பயணித்தால் வருவது தான் பெர்லிஸ் மானிலம். பெர்லிஸ் மானிலமாகத் தற்சமயம் கருதப்படுவது முன்னர் கெடா மானிலத்தின் ஒரு பகுதியாகவும் 1821க்குப் பிறகு சில காலங்கள் தாய்ந்தின் (சயாம்) ஆட்சிக்குட்பட்டும் இருந்துள்ளது. பெர்லிஸ் மானிலம் அளவில் சிறிதெனினும் தனி சுல்தான், மானிலக்கொடி, சட்டமன்றம் என அனைத்து அதிகாரத்துவ தகுதிகளும் கொண்டு விளங்கும் ஒரு மானிலம். இந்த மானிலத்தின் தலைநகரம் கங்கார்.

பினாங்கிலிருந்து பெர்லிஸ் சென்றடைவதென்றால் பேருந்து அல்லது வாகனத்தில் செல்வது சுலபம். மலேசியாவின் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் வாகனமோட்டிக் கொண்டு பயணிப்பது ஒரு சுகமான அனுபவம் என்பதுடன் இதுவே சிறந்த வழியும் கூட. பினாங்கிலிருந்து கங்கார் ஏறக்குறைய 170 கி.மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. வாகணத்தில் சென்றால் ஏறக்குறைய 2 மணி நேரத்திற்குள் கங்காரை அடைந்து விடலாம்.


பொருளாதார அடிப்படையில் பெர்லிஸ் மாநிலம் விவசாயம், காட்டு வளம் ஆகியவற்றை நம்பியிருக்கும் ஒரு மானிலம். பார்க்கும் இடமெங்கும் நெல்வயல்கள் சூழ்ந்து பச்சை பசேலென கண்ணுக்கு குளுமையளிக்கும் ஒரு மானிலம் இது. அடர்ந்த காடுகள் சூழ்ந்தது. சுற்றுலா பயணிகள் வந்தால் பெரும்பாலும் காடுகளில் நடப்பதற்கும் மலையேறுவதற்கும், இயற்கைச் சூழலை ரசிப்பதற்கும் நோக்கமாக கொண்டு வருகின்றனர். இங்குள்ள சுற்றுலா தளங்கள் அனைத்தையுமே இரண்டு நாட்களுக்குள் பார்த்து விடலாம். ஆனால் இதன் இயற்கை அழகை என்றென்றும் ரசித்துக் கொண்டிருக்கலாம்.ஆக பெர்லிஸ் மானிலத்தை சுற்றிபார்த்து வர திட்டமிட்டு ஒரு சிறிய கஞ்சில் (Kancil) வாகனம் ஒன்றை வாடகைக்கு எடுத்துக் கொண்டு பினாங்கிலிருந்து நான் கங்கார் நோக்கி புறப்பட்டேன்.

முனைவர்.க.சுபாஷிணி

Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *