பெர்லிஸுக்குப் பயணம்-9 (பெர்லிஸ் சயாமியர் ஆட்சியில்)

இத்தொடரின் முந்தைய பகுதிகளில் மலேசிய சுதந்திரத்திற்கு முன்னர் பெர்லிஸ் முன்னர் கெடா மானிலத்தின் இணைந்த நிலப்பரப்பாகவும் பின்னர் சில காலம் சயாமின் (தாய்லாந்து) ஒரு பகுதியாகவும் இருந்தது என்று குறிப்பிட்டிருந்தேன். இதனை சற்று விரிவாக இப்பகுதியில் விளக்க முயற்சிக்கிறேன்.

பெர்லிஸ் மானிலத்தின் முந்தைய பெயராக குறிப்பிடப்படுவது கோத்தா இந்திரா காயாங்கான் (Kota Indera Kayangan). இதனை தமிழில் “இந்திரனின் சுவர்க்க நகரம்” எனச் சொல்லலாம். 17ம் நூற்றாண்டில் ஆட்சியில் இருந்த கெடா நாட்டின் (இன்றைய கெடா மானிலத்தின்) மன்னர் சுல்தான் தியாவுடின் அல்-முக்கராம் ஷா இப்னி அல்மர்ஹூம் சுல்தான் முஹையிடின் மன்சூர் ஷா 1661 – 1678க்கிடையில் உருவாக்கிய நகரம் தான் கோத்தா இந்திரா காயாங்கான். கெடா (கடாரம்)வின் தலைநகரமாக கோத்தா இந்திரா காயாங்கான் அமைந்திருந்தது.இந்த நகரம் அரச நகரமாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. இதற்கு மிக முக்கிய காரணம் இந்த நகர் அமைந்திருக்கும் பகுதி. இயற்கை அழகு நிறம்பியதோடு சியாமிற்கு அருகாமையிலும் இருந்ததால் இந்த நகரம் மன்னரின் தலைநகர தேர்விற்கு மிக முக்கிய இடம் வகித்தது. இந்த நகரில் அப்போது இரண்டு பெரிய நுழைவாயில்களும் அமைக்கப்பட்டன.

ஆனால் நீண்ட காலங்கள் இந்த நகரின் வளர்ச்சியும் செழிப்பும் நிலைத்திருக்க வில்லை. இந்த மன்னரின் மரணத்திற்குப் பின்னர் முடிசூடிய இவரது பேரன் தெங்கு ஙா புத்ரா (Tengku Ngah Putra) தனது தலைநகரத்தை கோத்தா புக்கிட் பினாங் எனும் பகுதிக்கு மாற்றி விட்டார். இதனால் கொஞ்சம் கொஞ்சமாக இந்திரனின் சுவர்க்க நகரம் எனப் பெயர் கொண்ட அன்னாளைய பெர்லிஸ் தனது முக்கியத்துவத்தை இழக்கும் நிலை ஏற்பட்டது. ஆனாலும் தொடர்ந்து கெடாவின் ஒரு பகுதியாகவே இருந்து வந்தது.

1821 – 1839ல் நடந்த பல்வேறு குழப்பங்களில் சயாம் படைகள் கெடா நாட்டை கைப்பற்றிக் கொண்டன. அது சமயம் பெர்லிஸ் முழுதாக சயாம் நாட்டினரின் ஆட்சிக்குட்படுத்தப்பட்டிருந்தது. இந்த அடிமை நிலையில் தொடர்ந்து இருக்க விரும்பாத கெடா மக்கள் 1838, 1839ம் ஆண்டுகளில் பல்வேறு வகையில் கிளர்ச்சிகளையும் தாக்குதல்களையும் நடத்தி வந்தனர். ஆனால் பெரிய அளவில் வெற்றி ஏதும் கிட்டவில்லை. பாங்கோக் நகரிலிருந்து வந்த சயாமின் பலம் பொருந்திய ஆயிரம் போர் வீரர்கள் கொண்ட படை இந்த உள்ளூர் கிளர்ச்சிக் காரர்களை அடக்கி வைத்திருந்தது. அத்துடன் மலாயாவை முழுதாக கைப்பற்றிக் கொள்ள காத்திருந்த பிரித்தானிய அரசும் சயாமியர்களுக்கு உதவி வந்தது.

இந்தக் காலகட்டத்தில் கெடா மன்னர்களின் ஆட்சி மறைந்து சயாமிய மன்னரின் ஆட்சி வரம்புக்கு உட்பட்டிருந்தது கெடாவும் அதன் அன்றைய ஒரு பகுதியான பெர்லிஸும். லிகோர் ராஜா (Raja Ligor) அவர்களின் மறைவுக்குப் பின்னர் (மே 1839) சயாமிய அரசு இந்தப் பகுதியின் ஆட்சி முறையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியது. இந்தப் புதிய ஆட்சி முறையில் உள்ளூர் மலாய் மகக்ளின் பிரதி நிதிகளையும் இணைத்துக் கொள்வது என முடிவாகி ஆட்சி அமைப்பில் மலாய் பிரதினிதிகளைச் சேர்த்துக் கொண்டது. இந்த வகையில் இக்குழுவில் இடம் பெற்றவர்கள் சயாம் அரசுக்கு சார்பாக இருந்த மலாய் இனத்தவர்கள். இந்தக் காலகட்டத்தில் கெடா நான்கு மானிலங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மானிலங்களுக்கும் ஒரு கவர்னர் என்ற வகையில் ஆட்சி செலுத்தப்பட்டு வந்தது.

1941 டிசம்பர் 8ம் தேதி ஜப்பானிய ராணுவம் அன்றைய மலாயாவிற்குள் நுழைந்த நாள். சயாமிய அரசு ஜப்பானிய படையினருடன் இணைந்து இந்த ஆக்கிரமிப்பிற்கு உதவ முன்வந்திருந்தது. ஆக மலாயாவின் வடக்கு நுழைவாயிலாகக் கருதப்படும் பெர்லிஸ் வழியாக 1941ம் வருடம் டிசம்பர் 8ம் தேதி ஜப்பானிய படைகள் பெர்லிஸ் நகரில் கால் வைத்து நுழைந்தன. இந்த தாக்குதலை எதிர்ந்து ஜப்பானியப் படைகள் நுழைவதைத் தடுக்க பிரித்தானிய வீரர்கள் பதில் தாக்குதல் அளித்தனர். ஆயினும் டிசம்பர் 12ம் தேதி பாடாங் பெசார் வழியாக ஜப்பானிய படைகள் மலாயாவிற்குள்ளே நுழைந்தன. இந்தத் தாக்குதலை பிரித்தானிய படைகளால் எதிர்கொள்ள முடியவில்லை. அதிவேகமாகப் பரவிய ஜப்பானிய படைகள் கெடா மட்டுமன்றி மலாயா முழுவதையும் ஆக்கிரமித்துக் கொண்டன.

ஜப்பானிய படைகளின் ஆக்கிரமிப்பின் போதும் அதற்கு முன்னரும் பெர்லிஸ் பகுதிக்குப் பொறுப்பாக இருந்தவர் ராஜா சைட் அல்வி (Raja Syed Alwi). 1943ம் ஆண்டு இந்த மன்னர் இறக்கவே ஜப்பானிய அரசு இந்த மன்னரின் தந்தையின் சகோதரராகிய துவான் ஹம்ஸா இப்னு அல்-மர்ஹும் சைட் சாஃபி ஜாமாலுல்லைல் அவர்களை மன்னராக்கி ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்தது. இதனால் மனமுடைந்த ராஜா சைட் அல்வியின் நேரடி வாரிசான மனன்ர் ராஜா சைட் புத்ரா பெர்லிஸை விட்டு கிழக்குப் புற மானிலமான கிளந்தான் பகுதிக்குச் சென்று விட்டார். 1945ம் ஆண்டு வரை இந்த நிலை நீடித்தது.

ஜப்பானிய ஆக்கிரமிப்பின் போது மலாயா மக்கள் எதிர்கொண்ட பிரச்சனைகளுக்கும் கொடுமைகளுக்கும் அளவில்லை எனலாம். அந்தக் கொடுமைகளை இன்றைய மலேசிய மக்களும் வரலாற்றைப் பள்ளியில் பாடமாகப் படித்து மனதில் நிலை நிறுத்திக் கொண்டுள்ளனர். அதனை நிச்சயமாக விரிவாக வேறொரு பகுதியில் விளக்க முயற்சிக்கிறேன்.

ஜப்பானிய ஆக்கிரமிப்பில் பெர்லிஸ் சயாம் அரசின் பொறுப்பில் விடப்பட்டிருந்தது. கெடா, கிளந்தான், திரங்கானு ஆகிய இன்றைய மலேசியாவின் மூன்று மானிலங்களும் அச்சமயத்தில் சயாமின் பொறுப்பில் இருக்கும்படி ஜப்பானிய அரசு அமைத்திருந்தது. மலாயாவைக் கைப்பற்ற சயாம் செய்த உதவிக்கு பிரதி உபகாரமாக இந்த நிலை. 1945ல் ஜப்பானிய பிடியிலிருந்து மலாயா விலகிய பின்னர் அடுத்த 25 மாதங்கள் தொடர்ந்து இந்த மூன்று மானிலங்களும் தொடர்ந்து சயாமின் ஆட்சிக்குட்பட்டே இருந்து வந்தன.

மேலும் ஒரு சுவாரசியமான விஷயத்தையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

கெடா (பெர்லிஸும் சேர்த்து) சயாமின் ஆட்சிக்குட்பட்டிருந்த கால கட்டத்தில் சயாமிற்கு கப்பம் கட்ட வேண்டும் என சட்டம் கொண்டு வரப்பட்டது. கப்பமாக தங்கத்தாலும் வெள்ளியாலும் செய்யபப்ட்ட தங்க மரம்/ தங்க பூக்கள் சயாம் மன்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பெர்லிஸ் ஆராவ் நகரில் அமைந்திருக்கும் அரச கோட்டையிலிருந்து யானைகள் அணிவகுத்து இந்த தங்கத்தாலும் வெள்ளியாலும் ஆன மரங்களை கொண்டு செல்வார்களாம். முதலில் ஆராவிலிருந்து சிங்கோரா Singgora (இன்றைய சொங்காலா – Songkhala) வரை பாதுகாப்பாக எடுத்துச் சென்று பின்னர் அங்கிருந்து பாங்கோக் நகர் வரைக்கும் இந்த பயணம் தொடருமாம்.

படத்தில் தெற்கில் கீழே அமைந்திருக்கும் ஆராவ் நகரையும் சிங்கோரா நகரையும் வடக்கே அமைந்துள்ள பாங்காக் நகரையும் காணலாம்

1821 லிருந்து 1906 வரை இவ்வகையில் கெடாவிலிருந்து 32 தங்கப் பூக்கள் சயாம் மன்னருக்குக் கொடுக்கப்பட்டனவாம்.

தங்க மரம் /தங்கப் பூ (Bunga Emas) தற்சமயம் இவற்றில் சில பங்காக்கில் அமைந்துள்ள அருங்காட்சி நிலையத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன.

இந்த வரலாற்று செய்தியை ஞாபகப் படுத்தும் வகையில் ஆராவ் நகரிலிருந்து கங்கார் நகர் வரும் சாலை சந்திப்பில் அமைந்திருக்கும் செயற்கையாக வடிவமைக்கப்ப்ட்ட ஒரு பெரிய தங்க நிற்த்திலமைந்த மரத்தைக் காணலாம்.

-முனைவர்.க.சுபாஷிணி

Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *