பெர்லிஸுக்குப் பயணம்-11 (கரும்பும் சீனியும்)

வரைபடத்தில் வடக்கில் இருக்கும் சூப்பிங் நகரைக் காணலாம்.
சீனி சீனி.. எல்லாவற்றிலும் சக்கரையும் சீனியும் இல்லாத உணவை மலாய் மகக்ளின் உணவில் பார்ப்பது அதிசயம். காலை உணவு பலகாரமாகட்டும், மதிய உணவுக்கான குழம்பாகட்டும் மதியம் சாப்பிடும் பலகாரம், மாலை உணவு என அனைத்திலும் சீனியை தவராமல் சேர்க்கும் குணம் உள்ளவர்கள் இந்த இனிப்பான இதயம் கொண்ட மலாய் மக்கள்.

என்ன சீனி சீனி என பீடிகை போகிறதே என நினைக்கின்றீர்களா.. அடுத்து வருவது பெர்லிஸ் கரும்புகளைப் பற்றிய செய்திதான்.

மலேசியாவில் கரும்பிலிருந்து உற்பத்தி செய்யப்படும் சீனி ஏனைய மிகப்பெரிய பயிர் அல்லது தோட்டங்கள் போன்ற பெரிய அளவில் இல்லையென்றாலும் உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு மலேசியாவில் சீனி உற்பத்தி உள்ளது. மலேசியாவில் உள்ள மிகப்பெரிய மூன்று சீனி உற்பத்தி செய்யும் ஆலைகளும் அதனைச் சேர்ந்த கரும்பு தோட்டங்களும் நாட்டின் வடக்குப் பகுதியில் தான் உள்ளன. அதில் இரண்டு ஆலைகள் பெர்லிஸ் மானிலத்தில் அமைந்துள்ளது ஒரு தனிச் சிறப்பு.

பெர்லிஸ் மானிலத்தின் சுற்றுலா சிறப்பு அம்சங்களில் ஒன்றாகப் பட்டியலிடப்பட்டிருக்கும் சூப்பிங் கரும்பு ஆலை, கருப்பு தோட்டத்திற்கு எங்கள் வாடகை வாகனத்தைச் செலுத்தினோம். கங்காருக்கு வடக்கு நோக்கி பாடாங் பெசார் செல்லும் சாலையில் சென்றால் வரும் சூப்பிங் நகரில் தான் இந்த கரும்பு ஆலை உள்ளது. முந்தைய ஒரு பதிவில் கரும்பு ஆலையில் பணி செய்யும் தமிழர்கள் இருக்கின்றார்கள் என்றும் குறிப்பிட்டிருந்ததை சிலர் ஞாபகம் வைத்திருக்கலாம்.

குவாலா பெர்லிஸில் தங்கும் விடுதியிலிருந்து இங்கு செல்ல ஏறக்குறைய 40 நிமிடங்கள். சூப்பிங் நகரின் உள்ளே நுழைந்து பயணித்தால் தூரத்திலிருந்தே நீண்டு செல்லும் கரும்புத் தோட்டத்தின் பச்சை பசேலெனும் தோற்றம் நம்மை வரவேற்பது தெரியும். வீடுகளே இல்லாத சூழல் சாலையின் இரண்டு பக்கங்கலும் கரும்புச் செடிகள்.

 

சாலையில் வாகனத்தை மெதுவாகப் பயணித்துக் கொண்டு இந்த ரம்மியமான சூழலை ரசித்த நிமிடங்களும் இப்போதும் கூட மனதில் வந்து செல்கின்றன. ஒரே பச்சை. கம்பளம் விரித்தார் போல.

கரும்புகளை வெட்டி ஏற்றிக் கொண்டு வரும் வாகனம்

 

இந்த சூப்பிங் சீனி உற்பத்தி ஆலை (Chuping Sugar Cane Plantation) தான் பெர்லிஸ் மானிலத்தில் மட்டுமல்ல, மலேசியாவிலேயே மிகப் பெரிய சீனி உற்பத்தி ஆலை என்பது குறிப்பிடத்தக்கது. 22,000 ஹெக்டர் நிலப்பரப்பில் இங்கு கரும்பு பயிரிடுதல் நடைபெறுகின்றது. சூப்பிங் ஆலையில் தினம் 5500 மெட்ரிக் டன் எடை சீனி உற்பத்தி செய்யபப்டுகின்றது என இந்த ஆலையின் வலைப்பக்கம் குறிப்பிடுகின்றது.

 

வாகனத்தை சற்று நிறுத்தி விட்டு சாலையில் இறங்கி சற்று தூரம் நடந்தோம். வேலை செய்து விட்டு ஓய்வுக்காக மரத்தின் நிழலில் அமர்ந்திருக்கும் வங்காளதேசத்து கூலித் தொழிலாளர்களை அங்கு பார்க்க முடிந்தது. இவ்வகையில் தொழில்சாலைகளில் வேலை செய்வதற்காக இந்தோனீசீயாவிலிருந்தும் வங்காள தேசத்திலிருந்து பல தொழிலாளர்கள் மலேசியாவில் வேலைக்காக அழைத்து வரப்படுகின்றனர். இவரகளே சொற்ப சம்பளத்திற்காக உழைக்க சம்மதிப்பதாலும் அரசாங்கமும் இந்த இரண்டு நாடுகளுக்கும் மிகப் பெரிய அளவில் தொழிலாளர்களை இறக்குமதி செய்ய சம்மதித்திருப்பதாலும் குறைந்த சம்பளத்தில் வேலையாட்களைப் பெற்றுக் கொள்வதில் இது போன்ற பல தொழிற்சாலைகள் தயக்கம் காட்டுவதில்லை. இவர்களை கொண்டு வருவதற்காக சில பிரத்தியேக ஏஜென்சிகள் இருக்கின்றன. இவைகள் சில நேரங்களில் நேர்மையாகவும் பல நேரங்களில் மோசமாகவும் நடந்து கொள்வது வருந்ததக்க செய்தி.

இந்த ஆலையை வெளியிலிருந்தவாறே பார்த்து விட்டு மீண்டும் தெற்கு நோக்கி புறப்பட்டோம். அடுத்து செல்லவிருப்பது தாசேக் மெலாத்தி ஏரி.

-முனைவர்.க.சுபாஷிணி

Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *