பெர்லிஸுக்குப் பயணம்-12 (தாமான் மெலாத்தி ஏரி)

இயற்கை அழகு மட்டும் போதாது. செயற்கையாகவும் இந்த இந்திரனின் கனவு உலகத்தை அழகு படுத்த வேண்டும் என்ற எண்ணம் பெர்லிஸ் அரசாங்கத்திற்கு போலும். சூப்பிங்கிலிருந்து தெற்கு நோக்கி கங்கார் செல்லும் சாலையில் வந்தால் 20 நிமிடத்திற்குள் தாமன் மெலாத்தி ஏரிக்கரைக்கு வந்து விடலாம். பெர்லிஸ் மானிலத்தின் சுற்றுலா தலங்களின் பட்டியலில் இந்த ஏரியின் பெயரும் இடம் பெற்றிருக்கின்றது.

நான் சுப்பிங்கிலிருந்து புறப்பட்ட போதே மணி ஏறக்குறைய மதியம் ஒரு மணியாகி விட்டது. தாமன் மெலாத்தி பகுதிக்கு வந்து அங்கு மதிய உணவு சாப்பிடலாம் என்ற ஆர்வத்துடன் இங்கு வந்து சேர்ந்தேன். ஆனால் ஏமாற்றமே. இங்கு நல்ல உணவுக்கடைகள் எதுவுமே மதிய வேளையில் காணப்படவில்லை. வயிற்றுக்கு உணவில்லையெனினும் கண்களுக்கு நல்ல விருந்தாக அமைந்தது இந்த மெலாத்தி ஏரிப் பகுதி.

மிக அழகான ஏரி. குடும்பத்துடன் இங்கு பிக்னிக் வந்து மகிழ்ச்சியுடன் பொழுதைக் கழிக்கலாம். மிக நேர்த்தியாகப் பாதுகாக்கப்படும் பூங்காவாக இந்தப் பகுதி அமைந்துள்ளது. மாலையில் ஜோகிங் செய்ய வருபவர்களுக்கும் உடற்பயிற்சி செய்ய வருபவர்களுக்கும் நல்ல இடமாக இப்பூங்கா அமைந்துள்ளது.

மதிய வேளையில் மக்கள் நடமாட்டம் இப்பகுதியில் மிகக் குறைவாக இருப்பதால் இங்கு உணவுக்கடைகள் இல்லாமலிருக்கலாம். இதுவே பினாங்கு மானிலமாக இருந்தால் நிச்சயமாக குறைந்தது ஐந்தாறு உணவுக்கடைகளையாவது இங்கே காணலாம்.

 

-முனைவர்.க.சுபாஷிணி

Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *