பெர்லிஸுக்குப் பயணம்-14 (இறுதிப் பகுதி)

பெர்லிஸ் ஒரு சிறிய மாநிலம் தான். ஆனாலும் இப்பகுதியின் வரலாறு மிகச் சுவரசியமானது. தொடர்ந்து ஆராயப்பட வேண்டியது.

மலேசியாவிற்குச் சுற்றுப் பயணம் செல்பவர்களின் பட்டியலில் பெர்லிஸின் பெயர் நிச்சயமாக இருக்காது என்பதை மலேசியரான நான் அறிவேன். வானளாவி உயர்ந்து நிற்கும் கட்டிடங்களையும் வணிக நிறுவனங்களையும் கேளிக்கை விடுதிகளையும், விதம் விதமான உணவுக் கடைகளையும் விரும்புபவர்களுக்கு ஏனைய மாநிலங்கள் ஏராளமான வாய்ப்பினை வழங்குகின்றன என்பதை மறுக்க முடியாது. ஆனால் மலாய் மக்களின் வாழ்க்கை முறை, சேதப்படாத காடுகள், செயற்கயற்ற இயற்கையின் பேரெழில் இவற்றை ரசிக்க வேண்டுமென்றால் தாராளமாக ஒரு சில நாட்கள மலேசியாவின் இந்த வடக்கு எல்லை மானிலத்திற்குச் சென்று வரலாம்.
மலேசிய பழங்களை விரும்பி உண்பவர்கள் குறிப்பாக ரம்புத்தான் டுரியான், லங்சாட், டுக்கு போன்றவற்றை விரும்புபவர்கள் ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்தில் இப்பகுதியில் சுற்றுலா செய்வது மிகச் சிறந்தது. மிகக் குறைந்த விலையில் இப்பழங்கள் இங்கு கிடைக்கின்றன. இங்கிருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் கொண்டு வரப்படுகின்றன என்பதும் ஒரு முக்கியச் செய்தி.

பெர்லிஸ் மாநிலத்தில் 4 நாட்கள் எங்கள் பயணம். அது முடித்து கெடா வழியாக மீண்டும் பினாங்கு திரும்ப வேண்டும். இடையில் மலேசியாவின் மிகப் பெரிய அரிசி அருங்காட்சியகத்தையும் பார்த்து விட்டு பினாங்கிலிருக்கும் என் சகோதரியின் இல்லம் திரும்ப திட்டம். இந்த டிசம்பர் 2010 – ஜனவரி 2011 மலேசியப் பயணத்தில் பெர்லிஸ் மட்டுமன்றி மலாக்க மாநிலத்திலும் சில நாட்களைக் கழிக்க வாய்ப்பமைந்தது. 15ம் நூற்றாண்டு வாக்கில் புகழ் பெற்ற மாலாயாவின் முக்கிய துறைமுக நகரமல்லவா மலாக்கா ?


மலேசியா என்றால் அது எளிமை..! அழகு..! பசுமை.. ! தோழமை..! தூய்மை..! நேசம் மிக்க மக்கள் .!

-முனைவர்.க.சுபாஷிணி

Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *