Home மாநிலங்கள்பினாங்கு பினாங்கு மாநிலம்

பினாங்கு மாநிலம்

by admin
0 comment

பினாங்கு மாநிலம் அழகான குட்டியான ஒரு மாநிலம். இந்த மாநிலத்திற்கு இரண்டு பகுதிகள் உண்டு. ஒன்று பினாங்குத் தீவு, மற்றொன்று பட்டர்வொர்த் என்று அழைக்கப்படும் தீபகற்ப மலேசியாவின் ஒரு பகுதி. இந்த மாநிலத்தின் தலைநகரத்தின் பெயர் Georgetown. இந்த மாநிலத்தின் சிறப்பே இதன் சுற்றுலா தலங்கள் தான். இந்த மாநிலத்தில் தான் அனைத்துலகப் புகழ் பெற்ற பலகலைக்கழகங்களில் ஒன்றான University Science Malaysia அறிவியல் பல்கலைக் கழகம் இருக்கின்றது.

பினாங்கில் வார ஓய்வு நாட்களைக் கழிப்பதற்கு இனிமையான பல இடங்கள் இருக்கின்றன. முன்பெல்லாம் வார இறுதி நாட்களில் நான் எனது நண்பர்களோடு எப்போதும் வெளியே கிளம்பி விடுவதுண்டு. ஒவ்வொரு நாளும் இங்கே திருநாள் தான். மனதிற்குப் பிடித்த அத்தனை விஷயங்களும் இங்கே கிடைக்கும்.

பினாங்குத் தீவையும் பட்டர்வொர்த் பகுதியையும் இணைக்கும் பாலம் ஒன்று 1988ல் கட்டப்பட்டது. இதன் நீளம் 13.5 km. ஒவ்வொரு முறை இந்தப்பாலத்தைக் கடக்கும் போதும் காரிலிருந்து இறங்கி தீவின் அழகை ரசிப்பதற்கு எனக்குப் பிடிக்கும். அதிலும் காலை நேரத்தில் பாலத்தில் பிரயாணம் செய்யும் போது பாதி பனி மூடியும் மூடாமலும் இருக்கும் காட்சி கொள்ளை அழகு.

பினாங்கு தீவிற்கு வருவதற்கு Ferry கப்பல் எடுத்தும் பிரயாணம் செய்யலாம். 30 நிமிடம் நீடிக்கும் இந்தப் பிரயாணம் சுவாரசியமாக இருக்கும். கடலில் நீந்தும் Jelly மீன்களை கண்டு ரசித்துக் கொண்டு பயணிக்கலாம்.


மலேசியா பொதுவாக பச்சை பசேலென்று இருக்கும் ஒரு நாடு. இங்கு வருடம் முழுதுமே (ஏப்ரல் மே தவிர்த்து) மழை பெய்து கொண்டே இருக்கும். ஆக பினாங்கில் இயற்கை ஆழகு நிறைந்த பல பூங்காக்கள் இருக்கின்றன. அதில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்று Botanical Garden. இந்தப் பகுதியை தண்னீர் மலை என்று சொல்வதும் உண்டு. இந்தப் பகுதியில் மலேசியாவில் மிகப் பிரசித்தி பெற்ற 3 ஹிந்துக் கோயில்கள் இருக்கின்றன. தண்ணீர்மலை முருகன் கோயில் (மலைக்கோயில்), நாட்டுக் கோட்டை செட்டியார் முருகன் கோயில், அதோடு புதிதாகக் கட்டப்பட்டிருக்கும் மீனாட்ஷி சுந்தரேஸ்வரர் கோயில் ஆகிய மூன்றும் மலேசியாவின் மிகப் பிரசித்தி பெற்றவை. மலேசியாவைச் சுற்றிப் பார்க்க நினைத்தால் தைப்பூசம் நடக்கும் நாளை நாட்குறிப்பில் பார்த்து விட்டு வர மறக்க வேண்டும். (மலேசியாவின் சிறப்புக்களில் தைப்புசத் திருவிழாவும் ஒன்று) சரி Botanical Garden-க்கு வருவோம்.


இந்த Botanical Gardenக்கு வந்தவுடனே நம்மை வரவேற்க குரங்குகள் ஓடிவரும். அவ்வளவு குரங்குகள் இங்கே உண்டு. இங்கே செல்லும் போதெல்லாம் பழங்களும் கடலைகளும் வாங்கிக் கொண்டுதான் செல்வேன். நடக்கும் போது கைகளில் வந்து பிடிங்கிச் செல்லும் அளவிற்கு இந்தக் குரங்குகளுக்கு அவ்வளவு தைரியம் உண்டு. Botanical Garden வாசலிலேயே இளநீர் கடைகள் மற்றும் குளிர்பான சிற்றுண்டி கடைகளும் இருக்கும். Botanical Garden உள்ளே சென்றால் அருவி ஒன்று இருக்கும். இங்கே குளித்து மகிழலாம். மலை உச்சியிலிருந்து கொட்டும் அருவி சில்லென்ற அருவியாகியிருக்கின்றது.

மலேசியாவிற்கு வரவேண்டுமென்று இப்பவே ஆசை வந்துவிட்டதல்லவா..:-)

முனைவர்.க.சுபாஷிணி

You may also like

Leave a Comment