Home இலக்கியங்கள்கட்டுரைகள் பெர்லிஸுக்குப் பயணம்-2 (பாடாங் பெசார்)

பெர்லிஸுக்குப் பயணம்-2 (பாடாங் பெசார்)

by admin
0 comment

மலேசியாவின் வடக்கில் தாய்லாந்து நாட்டின் எல்லையில் அமைந்திருக்கும் மானிலங்களில் பெர்லிஸ் மானிலமும் ஒன்று. இந்த எல்லைப் பகுதி முழுக்க அடர்ந்த காடுகள் அமைந்துள்ளன. தாய்லாந்திலிருந்து மலேசியா நுழைவதற்கும் இங்கிருந்து தாய்லாந்து செல்வதற்கும் பாடாங் பெசார் நகரின் வழியாகச் செல்ல வேண்டும். பாடாங் பெசார் செல்வதற்கு முன்னர் பெர்லிஸ் மானிலத்தில் பார்க்கக் கூடிய இடங்களைப் பற்றி சற்று தெரிந்து கொள்வோம்.

பெர்லிஸ் மானிலத்தின் தலைநகரமான கங்கார் மிகச் சிறிய ஒரு நகரம். அரசரின் அரண்மனை கூட இங்கு இல்லை. வர்த்தக நிறுவனங்கள், தங்கும் விடுதிகள், விற்பனை அங்காடிகள் அரசாங்க அலுவலகங்கள் ஆகியவை இங்கு உள்ளன. நல்ல உணவுக் கடைகளைக் கூட இங்கே காண முடியவில்லை. அடுத்ததாக சற்று பெரிய நகரம் என்றால் கடற்கரை நகரமான குவாலா பெர்லிஸ் நகரத்தைச் சொல்லலாம். இங்கு தான் எங்கள் தங்கும் விடுதியும் அமைந்திருந்தது. இது தவிர பெர்லிஸ் மானிலத்தில் பார்ப்பதற்கு குவா கெலாம் (கெலாம் குகை), கோத்தா காயாங் அருங்காட்சியகம், பாம்புப் பண்ணை, தீமா தாசோ ஏரி, சூப்பிங் கரும்பு வயல், வாங் கெலியான் ஞாயிற்றுக் கிழமை சந்தை, அரச மாளிகை ஆகிய பகுதிகளைக் குறிப்பிடலாம். இவை அனைத்தையுமே மூன்று நாட்களில் பார்த்து விடலாம். பெர்லிஸ் அவ்வளவு சிறிய ஒரு மானிலம்.

பெர்லிஸ் மானிலத்தில் தமிழர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. இங்கு தமிழர்கள் இருக்கவும் வாய்ப்பு குறைவு என்பதால் இங்கே கோயில்களோ தமிழ் பள்ளிகளோ ஏதேனும் அமைப்புக்களோ இருக்க வாய்ப்பில்லை என நினைத்திருந்தேன். ஆனால் அதிசயமாக அங்கே ஒரு ஹிந்து கோயிலைக் கானும் வாய்ப்பும் அமைந்தது என்னால் மறக்க முடியாத ஒரு அனுபவம்.

சரி – பாடாங் பெசார் நகரத்திற்கான எங்கள் பயணத்திற்கு இப்போது வருவோம். குவாலா பெர்லிஸ் நகரிலிருந்து ஏறக்குறை 45 கிமீட்டர் தூராத்தில் இந்த நகரம் உள்ளது. வாகனத்தில் பயணித்தால் ஏறக்குறைய 30 நிமிடத்தில் இங்கே வந்து சேர்ந்து விடலாம். பாடாங் பெசார் எல்லைப்பகுதிக்கு 2 கிமீட்டர் தூரத்திலேயே காவல் நிலையம் ஒன்று அமைக்கப்பட்டு தாய்லாந்து செல்பவர்களும் மலேசியாவிற்குள் வருபவர்களும் தகுந்த நுழைவு பத்திரங்கள் வைத்திருப்பதை உறுதி செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். அதேபோல பாடாங் பெசார் தாய்லாந்தின் எல்லையில் தாய்லாந்து சுங்க வரி நிலையத்தைக் கடந்து அங்கேயும் தகுந்த நுழைவுப் பத்திரங்களைக் கொண்டிருந்தால் மட்டுமே அனுமதிக்கின்றனர்.


இந்த பாடாங் பெசார் என்பது மலேசிய மக்களுக்கு ஷாப்பிங் செய்வதற்கு மிகவும் பிடித்தமான ஒரு ஊர். அதிலும் குறிப்பாக மலாய் இன மக்களுக்குப் பாடாங் பெசார் சென்று ஆடை அணிகலன்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கி வருவதில் மிகுந்த நாட்டம் கொண்டவர்களாக உள்ளனர். இதற்கு முக்கியக் காரணம் இங்கே பொருட்களின் விலை மலேசியாவை விட மிக மிக மலிவு என்பதே. எனது பள்ளிக் காலத்திலேயே எனது சக மாணவர்கள் வார இறுதி நாட்களில் தங்கள் குடும்பத்தினருடன் இங்கே சென்று ஆடைகள் வீட்டு அலங்காரப் பொருட்கள் வாங்கி வருவதைப் பற்றி குறிப்பிடுவார்கள்.


பாடாங் பெசாரைப் பற்றி நிறையவே கேள்விப் பட்டிருந்ததால் எனக்குள் பெரிய எதிர்பார்ப்பும் இருந்தது. ஆனால் எல்லையைக் கடந்து உள்ளே நுழைந்ததும் எதிர்பார்த்த அளவில் அங்கிருந்த நிலை அமைந்திருக்கவில்லை. எனக்கு இது பெரும் வியப்பு தான். பெரும்பாலும் மலேசிய கிராமத்து மக்கள் பெரிய வேன்களில் வந்து இங்கு மூட்டை மூட்டையாக துணிகளை வாங்கிச் செல்ல வருகின்றனர். அதிகமாக பெரிய ரக வேன்களையே இங்கே காண முடிகின்றது. கடைகளின் தரம், விற்கப்படும் பொருட்களின் தரம் என பார்க்கும் போது மலேசியாவில் உள்ளூரில் தயாரிக்கப்படும் பொருட்களின் தரத்துடன் ஒப்பிட முடியாத நிலையில் உள்ளது உண்மை. நாங்கள் ஓரளவு சுற்றிப்பார்த்து விட்டு கடைகளில் சற்று ஏறி இறங்கி பின்னர் ஒரு உணவகத்தில் மதிய உணவு சாப்பிட்டு விட்டு திரும்பினோம்.

தாய்லாந்து உணவு வகை மிகச் சுவையானது. குறிப்பாக அதிகமாக தேங்காய்ப்பால் கலந்து சமைக்கின்றனர். மலாய் உணவுகளில் உள்ள தேங்காய்ப்பாலின் அளவை விட அதிகம் என்றே சொல்ல வேண்டும். அத்துடன் இவர்கள் உணவில் பயன்படுத்தும் சிறிய மிளகாய் (ஊசி மிளகாய்) சில்லி பாடி (cili padi) வித்தியாசமான சுவையைத் தரக்கூடிய ஒன்று.


இவை மிகச் சிறியதாக ஏறக்குறைய மூன்றிலிருந்து ஐந்து செண்டிமீட்டர் அளவில் பச்சை, சிவப்பு இரண்டு நிறங்களிலும் கிடைக்கும். இந்தப் பச்சை மிளகாயை மட்டும் எடுத்து தனியாக அறைத்து அதை மிளகாய் விழுதாக பயன்படுத்தி அதிக தேங்காய்ப்பால் அத்துடன் “அசாம் கெப்பிங்” (Asam keping) ( இதற்கு தமிழ் பதம் தெரியவில்லை) சேர்த்து குழம்பு வகைகளை சமைக்கின்றனர். உறைப்பும் புளிப்பும் தேங்காய்ப்பாலின் இதமான கொழுப்பும் கலந்து அது வித்தியாசமான சுவையைத் தரும் உணவு என்று கூறலாம். ஜெர்மனியிலும் குறிப்பிடத்தக்க வகையில் தாய்லாந்து உணவகங்கள் உள்ளன.

நமது சமையலில் எப்படி மல்லி தழைகளைப் பயன்படுத்துகின்றோமோ அது போல இவர்கள் பயன்படுத்தும் துளசி மிக வித்தியாசமானது; மிகச் சுவை சேர்ப்பது.

இந்த துளசி ஜெர்மனியிலும் கூட கிடைக்கின்றது. இதற்கு Thai Basilicum என்று பெயர். தாயலாந்து உணவு வகைகளை இதுவரை சுவைத்திராதவர்கள் ஒரு முறை முயற்சி செய்து பாருங்களேன். அதிலும் குறிப்பாக தாய்லாந்து துளசி சேர்த்த உணவை சுவைக்க மறக்க வேண்டாம்!

You may also like

Leave a Comment