Home இலக்கியங்கள்கட்டுரைகள் பெர்லிஸுக்குப் பயணம்-8 (குவாலா பெர்லிஸ்)

பெர்லிஸுக்குப் பயணம்-8 (குவாலா பெர்லிஸ்)

by admin
0 comment

பெர்லிஸ் மானிலத்தில் கங்காருக்கு அடுத்த பெரிய நகரம் குவாலா பெர்லிஸ். பெர்லிஸுக்குச் சுற்றுப் பயணம் செய்பவர்கள் கொசுக்கடிக்கு பயப்படுபவர்களாக இருந்தால் நிச்சயமாக நீங்கள் குவாலா பெர்லிஸ் நகரில் தங்கி பெர்லிஸ் மானிலத்தைச் சுற்றிப் பார்ப்பது சிறந்தது என்பது என் அனுபவப் பூர்வமான கருத்து. முதலில் இணையத்தின் வழியாக தங்கும் விடுதியைத் தேடி பதிவு செய்திருந்த நான் முதல் நாள் நாங்கள் பதிவு செய்திருந்த அந்த அழகான காட்டுப் புற தங்கும் விடுதியில் தங்க வேண்டாம் என முடிவெடுத்து குவாலா பெர்லிஸுக்கு மாறினேன். பச்சை பசுமையான காட்டின் ஓரமாக அமைந்திருந்த அந்த சுற்றுப் பயணிகள் தங்கும் விடுதியில் அத்தனை கொசுக்கள். குளிர்சாதன வசதியிருந்தாலும் அதனையும் மீறி அறைக்குள் வந்து சாகசம் செய்யும் அசுர கொசுக்கள் அவை. 🙂

குவாலா பெர்லிஸ் ஒரு கடற்கரையோர நகர். துறைமுகம் உண்டு. இங்கிருந்து நேராக பெர்ரி மூலம் லங்காவித் தீவுக்காண பயணச் சேவையும் தினம் பலமுறை என்ற வகையில் வழங்கப்படுகின்றது.


தாய்லாந்துக்கு அருகில் என்பதாலும் இங்கே வியாபரத்திற்காக வந்து போவோரும் இருப்பதால் கூட்டம் நிறைந்த ஒரு நகராக இது இருக்கின்றது.

குவாலா பெர்லிஸின் சிறப்பே இங்குள்ள கடல் உணவுகள் தான். மீன்கள், இரால்கள், கடல் சிப்பிகள், நண்டுகள் என பல வகையான கடல் உணவுகளை இங்கு விற்பனைக்காக மக்கள் வைத்திருப்பதைக் காண முடிகின்றது.

தினம் மாலையில் 6 மணிக்கு மேல் இங்கு கடற்கரையோரமாக அமைந்துள்ள திறந்த வெளி ரெஸ்டோரண்ட்களில் மக்கள் தூரத்திலிருந்தெல்லாம் சாப்பிட வருகின்றனர். இந்த திறந்த வெளி உணவுக் கடைகள் நீளம் ஏறக்குறைய 2 கிலோமீட்டர் தூரம் இருக்கும். மாலை ஆறு மணிக்குமேல் உள்ளூர் மக்களும் சுற்றுப் பயணிகளும் இங்கே நிரம்பியிருக்கின்றனர்.

உள்ளூர் மலாய் மக்கள் கடல் உணவுகளை ரசித்து ருசித்து உண்பவர்கள். இங்குள்ள கடைகளில் அன்று கடலில் பிடிக்கப்பட்ட கடல் உயிரிணங்களைக் கடைக்காரர்கள் வைத்திருக்கின்றனர். அதில் அவரவருக்குத் தேவையான மீன், இரால், கடல் சிப்பி என தேர்ந்தெடுத்து கொடுத்தால் அதனை விரும்பும் வகையில் சமைத்துக் கொடுக்கின்றனர்.

இப்படி சமைக்கப்படும் மீன் சமையல் வகையோடு மலாய்க்காரர்களின் உணவில் எப்போதும் முக்கிய அங்கம் பெறும் பெத்தாய் (இது அவரைக்காய் போன்ற அமைப்பில் இருக்கும். மிகுந்த கசப்பு சுவை கொண்டது மற்றும் பெலாச்சான் சம்பால் (மிளகாயை காய்ந்த இராலோடு சேர்த்து அரைத்து வைத்த சட்னி) கட்டாயம் இடம் பெறும். இதோடு மூலிகை இலைகள், நெருப்பில் வாட்டிய கத்தரிக்காய் ஆகியவையும் கூட இடம் பெறும்.

நாங்கள் தங்கியிருந்த புத்ரா ப்ராஸ்மான் ஹோட்டலில் அடிக்கடி அரசாங்க அலுவலக சந்திப்புக்கள் நிகழும் போல. நாங்கள் தங்கியிருந்த சமையத்திலேயே ஒரு இஸ்லாமிய மாநாடு ஒன்றும் ஆசிரியர்கள் சந்திப்பு கருத்தரங்கம் ஒன்றும் நடைபெற்றுக்

கொண்டிருந்ததால் பல அரசாங்க ஊழியர்களின் நடமாட்டத்தைக் காலையில் காலை உணவின் போதும் மாலையில் இங்கே இந்த கடற்கரையோர திறந்த வெளி உணவகங்களிலும் காண முடிந்தது.

டுரியான் பழம் மிகவும் கடுமையான வாசம் உடையது. இதனை மலேசியர்கள் விரும்பிச் சாப்பிடுவோம். இதனை தங்கும் விடுதிக்குள் எடுத்து வரக்கூடாது என தடை செய்யப்பட்ட படத்தைப் பாருங்கள்.

 

 

  

கடற்கரையோரத்தில் தலையை எட்டிப் பார்க்கும் நண்டுகள்


நண்டு பிடிக்கும் மீனவர் ஒருவர்

-முனைவர்.க.சுபாஷிணி

You may also like

Leave a Comment