பெர்லிஸ் மானிலத்தைப் பொருத்த வரையில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்திற்கு முன்னர் வரை எழுதப்பட்ட ஆவணங்கள் குறைவாகவே கிடைத்துள்ளன என்ற போதிலும், இப்பகுதிக்கு வந்து சென்ற இந்திய, அராபிய, சீன வணிகர்களின் குறிப்புக்களில் பல செய்திகள் பதிவாக்கப்பட்டுள்ளன என்பதை அருங்காட்சியகத்தில் உள்ள குறிப்பிலிருந்து அறிந்து கொள்ள முடிகின்றது. அதிலும் குறிப்பாக ஸ்ரீ விஜய பேரரசு செழிப்புற்றிருந்த கால கட்டத்தில் இங்கு ஹிந்து மதமும் புத்த மதமும் மிகப்பரவலாக வழக்கில் இருந்துள்ளது.
ஐ.ஹெச்.என்.இவான்ஸ், ஹெச்.டி.கொலின்ஸ் இருவரது தொல்பொருள் ஆய்வுகள் பெர்ஹாலா குகை, பிந்தோங், கூரூங் பத்தாங் குகை போன்ற பகுதிகளில் புத்த, ஹிந்து மத இறை வழிபாட்டு சின்னங்கள் கிடைக்கப்பட்டிருப்பதைக் குறிப்பிடுகின்றன.
இங்கே கிடைக்கப்பட்ட களி மண்ணாலான ஒரு சின்னத்தில் போதிசத்வர் அவலோகிதர் பதிக்கப்பட்ட ஒரு சின்னமும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இங்கிருந்த மக்கள் மஹாயண புத்தத்தைப் பின்பற்றியவர்களாக இருந்திருக்க வாய்ப்புண்டு என்பதும் பெர்லிஸ் அருங்காட்சியகத்தில் இச்சின்னத்தோடு இணைத்து வைக்கப்பட்டுள்ள விளக்க அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இங்கு கண்டு பிடிக்கப்பட்ட இறை வழிபாட்டு சின்னங்கள் 10ம், 11ம் 12ம் நூற்றாண்டு சின்னங்களாக இருக்கலாம் என இத்தொல்பொருள் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். பண்டைய மலாயாவில் குறிப்பாக பெர்லிஸ் மானிலத்தில் இந்திய தாக்கம் இருந்தமைக்கான சான்றுகளில் இவையும் குறிப்பிடத்தக்கவை என நாம் மனதில் கொள்ளலாம்.
முனைவர்.க.சுபாஷிணி